அரசு பள்ளி அருகே புகை மூட்டம்

அரசு பள்ளி அருகே திடீர் புகைமூட்டம்: தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்
சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் அமைந்துள்ள இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீர் புகை மூட்டத்தால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக திணறினர். வெள்ளிக்கிழமை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது, பள்ளி சுற்றுச்சுவர் அருகே கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீ ஏற்பட்டது. இதனால் வந்த அடர்த்தியான புகை மூட்டம் பள்ளிக்குள் புகுந்ததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கடுமையாக சிரமப்பட்டனர். பல மணி நேரம் எரிந்த இந்த தீயை ஊராட்சி பணியாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், பள்ளி சுற்றுச்சுவரையொட்டி இரண்டு இடங்களில் நெகிழி மற்றும் கழிவுப் பொருட்கள், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் சேலை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான ஜரிகை கழிவுப் பொருட்கள், ஹோட்டல், டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை இங்கு கொட்டி எரிப்பதால் துர்நாற்றமும் புகை மூட்டமும் ஏற்படுவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே, உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, குப்பைகளை மாற்று இடத்தில் எரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu