உரக்கடைகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்.
Salem News Today: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நுண்மீன் குஞ்சுகளை விரலிகளாக வளர்த்தெடுக்கும் பண்ணைக் குட்டைகள் அமைப்பது குறித்தும், மீன் குளங்கள் அமைத்து மீன் குஞ்சுகளை வளர்க்கும் முறைகள் குறித்தும், மீன் குஞ்சுகளுக்கு உணவிடும் முறைகள் குறித்தும், பயோ ஃபிளாக் முறையில் மீன் வளர்த்தல் போன்ற மீன்வளர்ப்பு முறைகள் குறித்து காணொலிக்காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசின் மூலம் மீன் வளர்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல், புதிய பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன்வளர்ப்பை ஊக்குவித்தல், பயோ ஃபிளாக் முறையில் மீன்வளர்த்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விரால் மீன் வளர்ப்பதற்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் மேட்டூர் அணையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 9626211440 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். விவசாயிகள் இதுபோன்ற அரசின் திட்டங்கள், வழிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளைக் கையாண்டு தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். மே மாதம் முடிய பெய்யவேண்டிய இயல்பான மழையளவு 186.8 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 24.05.2023 வரை 198.9 மி.மீ மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2023-24-ஆம் ஆண்டிற்கு நெல் 21,022 ஹெக்டர் பயிர் சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் 1,01,140 ஹெக்டர் பரப்பிற்கு சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயறு வகைகளுக்கு 56,900 ஹெக்டரும், உணவு தானியங்களுக்கு 1,79,062 ஹெக்டரும், எண்ணெய் வித்துக்களுக்கு 34,410 ஹெக்டரும் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய 2,333.3 ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையால் விவசாயிகளுக்கு நடப்பு 2023-24-ஆம் ஆண்டில் நெல் 148 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 114.9 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 309 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 284 மெட்ரிக் டன்னும், பருத்தி 3 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரங்களான யூரியா 22,246 மெட்ரிக் டன்னும், டிஏபி 14,896 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 12,355 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 18,650 டன்னும் என மொத்தம் 68;147 மெட்ரிக் டன் இரசாயன உரங்கள் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியா 7,170 மெட்ரிக் டன்னும், டிஏபி 6,117 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 274 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 15,470 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 29,031 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக் கடைகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனைக் கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விருப்பமுள்ள விவசாயிகளின் நிலங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ள வேளாண்மைத்துறை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை விவசாயப் பெருமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் வளர்ப்பு முறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சுவாதி ஸ்ரீ, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மேட்டூர் அணை) யுவராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu