சேலம் மாவட்டத்தில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் நேரு

சேலம் மாவட்டத்தில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் நேரு
X

மரக் கன்றுகள் நடும் நிகழ்வினை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.

சேலம் மாவட்டத்தில் 28 சதவிகிதமாக உள்ள பசுமைப் பரப்பளவை 33 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், வெள்ளக்கல்பட்டியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் 1 இலட்சம் மரக் கன்றுகள் நடும் நிகழ்வினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (02.10.2023) தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகரித்திடவும், பசுமை போர்வையை விரிவுபடுத்திடவும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார். பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமானது மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நிலத்தை வனப்பரப்பாக மாற்றுவதாகும். அந்தவகையில், காந்தி ஜெயந்தியை கொண்டாடுகின்ற இந்நாளில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் சேலம் மாவட்டம் முழுவதும் 1 இலட்சம் மரக் கன்றுகள் நடும் நிகழ்வு வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் 5,237 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மொத்த பரப்பளவில் 1,728.21 சதுர கிலோ மீட்டர் அதாவது 33 சதவிகிதம் பசுமை நிலப் பரப்பளவாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தற்பொழுது சேலம் மாவட்டத்தில் 1,469.84 சதுர கிலோ மீட்டர் பசுமைப் பரப்பளவாக, அதாவது 28 சதவிகிதமாக உள்ளது. இதனை 33 சதவிகிதமாக அதிகரிக்க இன்னும் 258.37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தேவைப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த இலக்கினை அடைய வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 25.83 சதுர கிலோ மீட்டரை வனப் பரப்பளவாக கொண்டுவர வேண்டும்.

இதற்கு ஆண்டிற்கு 17 இலட்சம் மரக்கன்று நட வேண்டி உள்ளது. இதில் வனத்துறை மூலமாக 16.46 இலட்சம் மரக்கன்றுகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக 1.71 இலட்சம் மரக்கன்றுகளும், நகராட்சிகள் துறையின் சார்பின் 11,500 மரக்கன்றுகளும், நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக 5,260 மரக்கன்றுகளும், தோட்டக்கலைத் துறையின் மூலமாக 40,000 மரக்கன்றுகளும், வேளாண்மைத் துறையின் மூலமாக 71,986 மரக்கன்றுகளும் என மொத்தம் 19.46 இலட்சம் மரக்கன்றுகள் நாற்றங்கலில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதனை சேலம் மாவட்டம் முழுவதும் நடுவதற்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் துறையினருக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமைப் போர்வையை இலக்காகக் கொண்டு சேலம் மாவட்டத்தினை 33 சதவிகிதம் வனப் பரப்பளவாகத் திகழச் செய்யும் வகையில் அனைத்துத் தரப்பினரும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!