சித்ரா பவுர்ணமியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை
கோட்டை பெருமாள் கோவிலில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா.
Salem News, Salem News Today - சேலத்தில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சாமிக்கு பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவன், சொர்ணாம்பிகை அம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் நெத்திமேடு தண்ணீர்பந்தல் மகா காளியம்மன் கோவிலில் அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருபாலித்தார். இதேபோல் சித்ரா பவுர்ணமியையொட்டி குமரகிரி தண்டாயுதபாணி கோவில், பாண்டுரங்கநாதர் கோவில், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோட்டை பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஜூன் 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று காலை கோட்டை பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சுதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடு, மதியம் 12 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. 27ம் தேதி காலை 8 மணிக்கு வெள்ளி பல்லக்கிலும், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்திலும் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 30ம் தேதி பிற்பகல் 2. 30 மணிக்கு சாமி திருக்கல்யாண உற்சவம், மாலை 6 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
வரும் 31ம் தேதி மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் சாமி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5. 45 மணிக்கு சாமியை கோவிலில் இருந்து தேருக்கு எடுத்து செல்லுதல், தொடர்ந்து காலை 8. 30 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4ம் தேதி காலை 9 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், 5ம் தேதி இரவு 7 மணிக்கு சத்தாபரணமும், 6ம் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu