சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்
பைல் படம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் 18.08.2023 மற்றும் 19.08.2023 ஆகிய நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இதற்கென மருத்துவ முகாம்கள், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மருத்துவ முகாம்கள் வருகின்ற 18.08.2023 அன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவிலும், 19.08.2023 அன்று ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான இம்மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மனநல சிறப்பு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், செவித்திறன் பரிசோதகர் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை இம்மருத்துவ முகாமிற்கு வருகை தருபவர்களுக்கு உதவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15 வயது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முகாம் நடைபெறும் நாட்களில் சிறப்பாசிரியர்கள் மூலம் கலந்துகொண்டு அடையாள அட்டை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 எண்ணிக்கை, குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu