சேலம் மாவட்டத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்: 2,202 பேருக்கு பணி நியமன ஆணை
சேலம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட 3 சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2,202 நபர்கள் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்துள்ளனர்.
கலைஞர்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மின்னாம்பள்ளியில் உள்ள ஏ.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு தனியார் துறைவேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (18.11.2023) நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மூன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே, சேலம் மாவட்டத்தில் 05.08.2023 அன்று சேலம் சோனா கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 3,807 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், 176 தனியார் தொழில் நிறுவனங்களும் கலந்து கொண்டதில், 563 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, 19.09.2023 அன்று நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 3,405 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், 117 தனியார் தொழில் நிறுவனங்களும் கலந்து கொண்டதில் 425 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இன்றைய தினம் நடத்தப்பட்ட மூன்றாவது சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5,812 க்கும் மேற்பட்ட இளைஞர்களும் 156 தனியார் தொழில் நிறுவனங்களும் கலந்து கொண்டதில் 1,214 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட 3 சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2,202 நபர்கள் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்துள்ளனர்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு, அரசு துறை வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு என்பது அரசுத்துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் பெருமளவில் பரவியிருப்பதால் வேலைநாடுநர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையிலே இணைப்பை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் தேர்வு பெற்ற அனைவரும் பணியில் சேர்ந்து, வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ந்து தொழில் முனைவோர்களாக மாற என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் பெரியசாமி, வேலைவாய்ப்புத்துறை மண்ட இணை இயக்குநர் லதா, வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார், ஏ.வி.எஸ் கல்லூரி செயலாளர் ராஜவிநாயகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu