சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள்

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக  ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள்
X

மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் 250-க்கும் மேற்பட்ட வகையிலான பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் காய்கறிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார்.

Salem News Today, Salem News - சேலம் மாவட்டத்தில் 31 எண்ணிக்கையில் முதன்முறையாக சிறப்பு தூர்வாரும் பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகளின் வரத்து வாய்க்கால்களில் மழைக்காலங்களில் மழைநீர் வரும்பொழுது, மழைநீரில் மணல் மற்றும் மண் கலந்து வருவதால் வாய்க்கால்களில் மண் திட்டுகள் உருவாகின்றன. எனவே, மண் படிவங்களை முறையாக அகற்றி தூர்வாரப்படவில்லை எனில் ஒவ்வொரு வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளிலும் தண்ணீர் உரிய நேரத்தில் கடைமடை வரை சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது.

விவசாயிகளின் பாசனத்திற்கு உரிய நேரத்தில் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க ஏதுவாக பருவமழைக்கு முன் ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகளின் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் துவங்கப்படவுள்ளன.

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 13,496.31 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 31 எண்ணிக்கையிலான பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் 03.05.2023 முதல் தோராயமாக 10.06.2023 வரை மேற்கொள்ளப்படவுள்ளன. கோடை காலத்திலேயே இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு,கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, உழவர் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இத்தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இப்பணிகளைக் கண்காணிக்க தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் இல.சுப்பிரமணியன் சிறப்புக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறப்பு தூர்வாரும் பணியின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் முன்னோடி விவசாயிகள், நீர்வளத்துறை உதவிப்பொறியாளர், கிராம நிருவாக அலுவலர், தொடர்புடைய கிராமத்தின் ஊராட்சிச் செயலர் ஆகியோரை உள்ளடக்கிய உழவர் குழுக்கள் உதவி வேளாண்மை அலுவலர் அவர்களின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட உள்ளன.

இக்குழுவானது வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் சிறப்பு தூர்வாரும் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள், பணிகளின் தரம் அல்லது தாமதம் குறித்த புகார்களைப் பெறுதல், எதிர்காலப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் பணிகளை சுமூகமாக நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.

குறிப்பாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, விவசாயப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வண்டல் மண் எடுப்பதற்கு உரிய ஏரிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அவற்றில் இருந்தும் வண்டல் மண் எடுக்க புதிதாக அனுமதி வழங்கப்படும்.

மேலும், இன்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்னையின் பூச்சி மேலாண்மை குறித்து காணொலிக்காட்சியின் மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. சமீப காலமாக தென்னையில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறித்தும், கருந்தலைப்புழு, ரூகோஸ் சுருள்வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளின் தாக்குதல் குறித்தும், பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக காணொலிக்காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கருந்தலைப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் பிராக்கனிட் ஒட்டுண்ணிகளை அயோத்தியாபட்டணம் வட்டாரத்தில் உள்ள சுக்கம்பட்டி தென்னை ஒட்டு சேர்ப்பு மையத்திலும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் கிரைசோபா அல்லது அப்படோக்கிரைசா ஆஸ்டர் என்ற இரைவிழுங்கிகளை சீலநாயக்கன்பட்டியில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்திலும் பெற்றுப் பயனடையலாம். கோடைக்காலங்களில் தென்னைகளின் பூச்சி மேலாண்மை முறைகளை விவசாயிகள் முறையாக செய்து தங்கள் தென்னைகளைப் பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய பெய்யவேண்டிய இயல்பான மழையளவு 86 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 28.04.2023 வரை 73.5 மி.மீ மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2023-24-ஆம் ஆண்டிற்கு நெல் 21,022 ஹெக்டர் பயிர் சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் 1,01,140 ஹெக்டர் பரப்பிற்கு சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயறு வகைகளுக்கு 56,900 ஹெக்டரும், உணவு தானியங்களுக்கு 1,79,062 ஹெக்டரும், எண்ணெய் வித்துக்களுக்கு 34,410 ஹெக்டரும் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் 2,25,944.20 ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறையால் விவசாயிகளுக்கு நடப்பு 2023-24-ஆம் ஆண்டில் நெல் 240 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 96 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 428 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 307 மெட்ரிக் டன்னும், பருத்தி 2 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரசாயன உரங்களான யூரியா 22,246 மெட்ரிக் டன்னும், டிஏபி 14,896 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3,810 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 18,650 டன்னும் என மொத்தம் 59,602 மெ. டன் இரசாயன உரங்கள் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியா 4,407 மெட்ரிக் டன்னும், டிஏபி 6,631 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 393 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 12,377 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 23,808 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் 250-க்கும் மேற்பட்ட வகையிலான பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் காய்கறிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ப. இரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?