கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சேலத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
பைல் படம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு, நேற்று மாலை ஆய்வு செய்தார். விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் வந்து செல்லும் வழித்தடம், அவர்கள் அமரும் இடங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், மகா தீபத்தின் போது வி.ஐ.பி. அமரும் பகுதி குறித்து ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் போது அனுமதி அட்டை வைத்துள்ள பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி கோவிலுக்குள் சென்று வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், மகாதீபம் பார்ப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இவ்விழா நடத்தி முடிப்பதற்கு காவல்துறை சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் இருப்பது போன்று இல்லாமல் இந்த ஆண்டு தேவையான அளவு எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே கோவிலுக்குள் மகா தீபத்தின் போது இருப்பார்கள். தேவையற்ற போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, வருகின்ற 05.12.2022 முதல் 07.12.2022 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 05.12.2022 முதல் 07.12.2022 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், ஆத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், நாமக்கல்லில் இருந்து திருவண்ணாமலைக்கு சேலம், அரூர் மற்றும் ஊத்தங்கரை வழியாகவும், அரூரிலிருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், தருமபுரியிலிருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், ஓசூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கிருஷ்ணகிரி மற்றும் தளத்தங்கரை வழியாகவும், பாலக்கோட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை வழியாகவும், திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிங்காரப்பேட்டை மற்றும் செங்கம் வழியாகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
எனவே, வருகின்ற 05.12.2022 முதல் 07.12.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu