மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகைக்கொள்ளை: பொதுமக்களிடம் சிக்கிய இளம்பெண்
கைது செய்யப்பட்ட சான்மா.
Salem News Today: சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியின் சவுந்தர் நகரில் மெகருன்னிஷா (வயது 80) மற்றும் இவரது மகள் கவுசல் ஜான் (52) ஆகியோர் குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர். கவுசல் ஜான், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் நசீர் மளிகை வியாபாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை கவுசல் ஜான், நசீர், பேரன்கள் அனைவரும் அவர்களது வேலை தொடர்பாக வெளியே சென்று விட்டனர். மெகருன்னிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று காலை சுமார் 11. 30 மணி அளவில் பர்தா அணிந்து வந்த இளம்பெண் ஒருவர், மூதாட்டி மெகருன்னிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்த மூதாட்டி தண்ணீர் எடுத்து வர வீட்டுக்குள் சென்ள்ளார்.
இதனையடுத்து அவரை பின்தொடர்ந்த அந்த பெண், வீட்டுக்குள் சென்ற மூதாட்டியிடம், நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மெகருன்னிஷாவின் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் அலறி துடித்த மூதாட்டி மெகருன்னிஷா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைக் கண்டு அந்த பெண் அங்கிருந்து நைசாக தப்பிக்க முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில், அன்னதானப்பட்டி போலீசார், மூதாட்டி மெகருன்னிஷாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அந்த பெண்ணை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் சேலம் லைன்மேடு, தர்மலிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்த சான்மா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் தங்கத்திலான தோடு, மாட்டல் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.
மேலும அந்த பெண் வேறு இடங்களில் ஏதேனும் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu