வராத குடிநீருக்கு வரி? கெங்கவல்லியில் மக்கள் வாக்குவாதம்

சேலம் மாவட்டத்தின் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் ஊராட்சியின் ந.மோட்டூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பிற்கான வரி வசூலிப்பு விவகாரத்தில் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 30 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 360 ரூபாய் குடிநீர் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் 2024ம் ஆண்டிற்கான குடிநீர் வரியை கிராம மக்கள் செலுத்தாத நிலையில், நேற்று கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ந.மோட்டூர் கிராமத்திற்கு குடிநீர் வரி வசூலிக்க சென்றனர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளை எதிர்கொண்டு, "ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை, வேறு குழாய்கள் மூலமாகத்தான் குடிநீர் பெறுகிறோம், அந்த குடிநீரும் சீரான முறையில் வினியோகிக்கப்படுவதில்லை, இந்நிலையில் வராத குடிநீருக்கு எப்படி வரி செலுத்துவது?" என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், "ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். ஜல்ஜீவன் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக வேறு குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது" என விளக்கம் அளித்தார். ஆனால் பொதுமக்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாததால், வட்டார வளர்ச்சி அலுவலரும் அவருடன் வந்த துறை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், "ஊராட்சி தலைவர் நிர்வாகத்தின் போது குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவை வசூலிக்கப்படவில்லை. தற்போது, தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் வரி உட்பட அனைத்து வரிகளையும் வசூலிக்குமாறு தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான், அவற்றை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேறு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் வரி வசூலிக்க வரும் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்" என குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu