கைவிடப்பட்ட, காயமடைந்த பிராணிகளுக்கு தனி இடம்: சேலம் ஆட்சியர் நடவடிக்கை

கைவிடப்பட்ட, காயமடைந்த பிராணிகளுக்கு தனி இடம்: சேலம் ஆட்சியர் நடவடிக்கை
X

பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பிராணிகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Salem News Today - கைவிடப்பட்ட, காயமடைந்த பிராணிகளுக்கு தனி இடம் தேர்வு செய்து பாதுகாத்திட சேலம் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Salem News Today - பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பிராணிகளை பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் 12.05.2023 அன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

பிராணிகளை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், மாவட்ட முதன்மை நீதிபதியைத் துணைத் தலைவராகவும் மற்றும் பிராணிகளின் நலனில் அக்கரையுடையவர்களை குழு உறுப்பினர்களாகவும் கொண்டு பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் அமையப்பெற்றுள்ளது. இச்சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட, காயமடைந்த பிராணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகக் குழுவுடன் இணைந்து தனி இடத்தைத் தேர்வு செய்து அங்கு மேற்குறிப்பிடப்பட்ட பிராணிகளை பாதுகாத்திடத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இக்குழுக்

கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கைவிடப்பட்ட பிராணிகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பிராணிகளைப் பத்திரமாகப் பாதுகாத்திடும் வகையில் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, விலங்குகளைக் கொள்வதோ துன்புறுத்துவதோ, வளர்ப்புப் பிராணிகளை அனாதையாக விட்டுச் செல்வதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, பொறி வைத்து பிடிப்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். கரடி, குரங்கு, சிறுத்தை, சிங்கம், புலி, மாடு போன்ற விலங்குகளைக் கேளிக்கைக்காக பயன்படுத்துவதும் குற்றமாகும்.

வளர்ப்பு பிராணிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் வழங்காமல் இருப்பதும், அவைகளை ஒரே இடத்தில் நெடு நாட்களாக அடைத்து வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். மேலும், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளைச் சீண்டுவது, துன்புறுத்துவது அவற்றிற்கு உடல் நலத்தைப் பாதிக்கும் வகையில் உணவு அளிப்பது குற்றமாகும். பிராணிகளைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சௌ.தமிழரசி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பாபு, பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகக் குழு துணைத் தலைவர் எஸ்.ஆர். சௌந்தரராஜன், செயலாளர் எஸ்.பெருமாள் மற்றும் குழு உறுப்பினர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் வீணா குருபதான், வித்யா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!