சேலம் மாவட்டத்தில் கோடை கால சாகுபடிக்கு கையிருப்பில் தேவையான விதைகள்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் கோடை கால சாகுபடிக்கு தேவையான விதைகள் கையிருப்பில் உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். பிப்ரவரி மாதம் முடிய பெய்யவேண்டிய இயல்பு மழையளவு 16 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 22.02.2023 வரை 8.6 மி.மீ மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை நெல் 20,500 எக்டர் பயிர் சாகுபடி பரப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது 23,555 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் 1,00,637 எக்டர் பயிர் சாகுபடி பரப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது 1,06,339 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயறு வகைகள் 55,900 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 47,035 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் 1,77,037 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,76,929 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள் 31,240 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 23,884 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கு 2,27,277 எக்டர் பரப்பில் வேளாண்பயிர்கள் சாகுபடி பரப்பு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு ஐனவரி 2023 வரை 2,15,646 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையால் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் நெல் 259.058 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 58.096 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 166.624 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 364.16 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் கோடை கால சாகுபடிக்கு தேவையான விதைகள் தொடர்புடைய வேளாண் விரிவாக்க மையங்களில் கையிருப்பில் உள்ளது.
இரசாயன உரங்களான யூரியா 32,676 மெட்ரிக் டன்னும், டிஏபி 9,208 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 5,418 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 25,111 டன்னும் என மொத்தம் 72,413 மெ. டன் இரசாயன உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. மேலும், யூரியா 4,742 மெட்ரிக் டன்னும், டிஏபி 3,452 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,471 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 14,028 டன்னும் என மொத்தம் 23,693 மெ. டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை விவசாயப் பெருமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, வேளாண் உற்பத்தியை பெருக்கி, அதிக வருவாய் ஈட்டி மென்மேலும் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய விதைகள் குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில் இயற்கை முறையிலான வேளாண் விலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்செல்வி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைச்செல்வி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu