சங்ககிரி பேரூராட்சி விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் கே.என். நேரு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு
சங்ககிரி பேரூராட்சியை விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சியில் முருகு சந்திரா அறக்கட்டளை மற்றும் சுவலெக்ட் எனர்ஜி சிஸ்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நன்கொடையாளர்களால் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டதையொட்டி, நன்கொடையாளர்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (16.12.2023) கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
முருகு சந்திரா அறக்கட்டளை பள்ளி, கல்லூரி மேம்பாட்டிற்காக பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர். மற்றும் சுவலெக்ட் எனர்ஜி சிஸ்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நன்கொடையாளர்களும் இதுபோன்று பணிகளைச் செய்து வருகின்றனர்.
சங்ககிரி பேரூராட்சியை விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தியாகி தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் வருகைதரும்போது சங்ககிரி சாலைகளைச் செப்பனிட்டுத் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, தொடர்புடைய துறையின் மூலம் தற்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லட்சுமண தீர்த்தம் குளத்தினைத் தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக அரசு சார்பில் செய்துதரப்படும்.
இதேபோன்று, நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய தனியார் பங்களிப்பு 33 சதவிகிதம் கொடுக்கும்போது அரசு சார்பில் மீதமுள்ள 67 சதவிகிதத் தொகை ஒதுக்கப்பட்டு அப்பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, உங்களோடு இணைந்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ந.லோகநாயகி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முருகு சந்திரா அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் கந்தசாமி, சுவலெக்ட் எனர்ஜி சிஸ்டம் உரிமையாளர் உள்ளிட்ட பல்வேறு நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu