சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
X

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பரிசுகளை வழங்கினார்.

Salem News Today - சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப்பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

Salem News Today - மாநிலம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாளை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படவுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுப்போட்டிகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (15.01.2023) நடைபெற்றது.

பொங்கல் திருநாளையொட்டி சுற்றுலாப் பயணிகள், வெளி மாநிலத் தொழிலாளர்கள், வெளி மாநிலத்தில் இருந்து வருகைபுரிந்து இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள், விலை மதிப்பில்லாத மனித உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், தீயணைப்புத் துறையினர், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்கள், நரிக்குறவர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் உட்பட ஏராளமானோர் பாரம்பரிய ஆடைகளில் பங்கேற்றப் பொங்கல் விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியரகம் முழுவதும் மலர்களால் பல்வேறு அழகிய வண்ணமிகு கோலங்களைக் கொண்டும், வண்ண விளக்குகளைக் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரியமிக்க தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள், இந்துக்கள், இராமகிருஷ்ணா மிஷன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Salem News

மேலும், உறியடி, கயறு இழுத்தல், சாக்குப்பை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பச்சரிசி, திணை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு பல்வேறு வகையிலான சுவையான பொங்கல் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. குறிப்பாக, ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்றுகூடி 10 மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் சிறந்த பொங்கல் வைத்தவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டுப் பயணிகள், வெளிமாநிலத்தினருக்கு மாட்டு வண்டியில் மாவட்ட ஆட்சியரகத்தைச் சுற்றி பயணம் செய்து மகிழ்ந்தனர். போலந்து, பின்லாந்து, உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கியும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இறுதியாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, அரசு அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!