சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி மாட்டு வண்டியில் பயணித்த ஆட்சியர்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (15.01.2024) நடைபெற்றது.
பொங்கல் திருநாளையொட்டி வெளிநாட்டவர்கள், சுற்றுலாப் பயணிகள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்கள் உட்பட ஏராளமானோர் பாரம்பரிய ஆடைகளில் பங்கேற்றப் பொங்கல் விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியரகம் முழுவதும் மலர்களால் பல்வேறு அழகிய வண்ணமிகு கோலங்களைக் கொண்டும், வண்ண விளக்குகளைக் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரியமிக்க தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், உ றியடி, கயறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பச்சரிசி, திணை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு பல்வேறு வகையிலான சுவையான பொங்கல் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. குறிப்பாக, ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்றுகூடி 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு மாட்டு வண்டியில் மாவட்ட ஆட்சியரகத்தைச் சுற்றி பயணம் செய்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இறுதியாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu