தடுப்பூசி விவகாரத்தில் ஸ்டாலினால் குழப்பம்: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தடுப்பூசி குறித்து ஸ்டாலின் பேசி, மக்களை குழப்பியதாக, எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எடப்பாடி பகுதியில் கொரோனா பாதிப்பு குறித்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் படுக்கைகள் விவரம் ஆகியவற்றை, அரசு தலைமை மருத்துவர் சரவணகுமாரிடம் கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து, எடப்பாடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காய்கறித் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு கவச உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் மூச்சுத்திணறல் பெற்றவர்களுக்கான ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. ஆத்தூர், மேட்டூர், ஓமலூர்,சங்ககிரி என ஊரகப் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. அவசர சிகிச்சைக்கான படுக்கை வசதியும் நிரம்பி விட்டன.

புதிதாக பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை கிடைக்காத நிலையே உள்ளது. அரசு விரைவாக கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டும். சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கை வசதி ஆக்சிஜன் வசதியுடன் ஒரு வாரத்தில் உருவாக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் இதுவரை தொடங்கவில்லை. போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

267 ஆய்வுக்கூடங்கள் நான் முதலமைச்சராக இருந்தபோது செயல்பட்டன. அதன் மூலம் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போதும் அந்த எண்ணிக்கையில்தான் உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.

தற்போது இறப்பை குறைத்து காட்டுகிறார்கள். எல்லா மயானங்களிலும் சடலங்கள் காத்து கிடக்கின்றன. இதுகுறித்து தகவல்கள் ஊடகங்களில் முழுமையாக வெளியாக வில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அலையில் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று கூறியிருக்கிறார். அது தவறு, வல்லரசு நாடுகளில் கூட அதனை கட்டுப்படுத்தவில்லை. அதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததால் தான் 500-க்கு கீழ் தொற்று பாதிப்பு குறைந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தடுப்பூசி குறித்து சந்தேகம் தெரிவித்த ஸ்டாலின், தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்படி கருத்துக்களை கூறும்போது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு விட்டது. இப்போது கூறும் கருத்துக்களை அவர், அப்போது தெளிவாக பேசியிருந்தால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!