சேலம் மாவட்ட க்ரைம் செய்திகள்
Salem News,Salem News Today- சேலம் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களில் தொகுப்பு.
Salem News,Salem News Today - பெண்ணிடம் நகை திருட்டு
சேலம், கிச்சிப்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவருடைய மனைவி சரளா (வயது 48). இவர் கடந்த 30-ம் தேதி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து சேலத்துக்கு தனியார் பஸ்சில் வந்தார். பின்னர் அவர் சீலநாயக்கன்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி புலிகுத்தி தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். இதையடுத்து கணவரை அங்கு வரவழைத்து, அவரது பைக்கில் வீட்டுக்கு சென்றார். கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் சென்ற போது அவர்கள் பைக்கில் இருந்து தவறி விழுந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். இதையடுத்து வீட்டுக்கு சென்ற சரளா தன்னுடைய பையில் இருந்த துணிமணியை வெளியே எடுத்து வைத்தார். அப்போது பையில் இருந்த நகை பாக்சை காணவில்லை. இதில் ௧௦.5 பவுன் நகை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரளா இந்த திருட்டு குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற தந்தை விபத்தில் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டர்குலமாணிக்கம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 26). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்செல்வி (24). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும், பிறந்து 15 நாட்களே ஆன இன்னொரு பெண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வசந்தகுமார் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக நேற்று மாலை தனது உறவினர் கண்ணன் என்பவருடன் பைக்கில் ஆட்டையாம்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு மருந்து வாங்கிகொண்டு இருவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை, கண்ணன் ஓட்டிவர வசந்தகுமார் பின்னால் அமர்ந்திருந்தார். காட்டுப்பாளையம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரே பைக் வந்த போது, அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில் வசந்தகுமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ்சின் பின்பக்க சக்கரம் வசந்தகுமாரின் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமார் உயிரிழந்தார். கண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து,வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமம் சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜயுடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் உடல்நிலை சரி இல்லாமல் விஜய் இறந்து விட்டார். மகன் இறந்த வேதனையால் மனம் உடைந்து காணப்பட்ட தாய் லட்சுமி, விஷம் குடித்து மயங்கினார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் லட்சுமியை உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பட்டறை தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 30). இவருக்கு ஆனந்த கோகிலா (24) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் கார்த்திக்குக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் கார்த்திக் வீட்டுக்கு வந்த போது, மனைவியிடம் தோசை சுட்டு கொண்டு வரும்படி கூறிவிட்டு வீட்டின் மேல் மாடிக்கு சென்றவர் அங்குள்ள இரும்பு விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.1.25 லட்சம் திருட்டு
கொண்டலாம்பட்டி அமானி கொண்டாம்பட்டி கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 33). இவர் செவ்வாய்பேட்டையில் வெள்ளி பட்டறை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவர், தனது மனைவி தமிழ்ச்செல்வியை (31) அழைத்துக்கொண்டு செவ்வாய்பேட்டையில் உள்ள பட்டறைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திய மர்ம நபர் அந்த வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். வீட்டுக்கு வந்து பார்த்த முத்துகிருஷ்ணன் திருட்டு குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாராயம் விற்ற 5 பேருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்
ஆத்தூர் பகுதியில் சந்து கடை மற்றும் சாராயம் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கெங்கவல்லி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதில், கெங்கவல்லியை சேர்ந்த ரமேஷ் (வயது42), ராஜா, ஒதியத்தூரை சேர்ந்த பரிமளா (37), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த லதா (36), கூடமலையை சேர்ந்த சக்திவேல் (48) ஆகிய 5 பேர் மீது ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் வழங்கி நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால், அவர்கள் நன்னடத்தை பிணைப்பத்திரம் காலத்தில் தொடர்ச்சியாக சாராயம் மற்றும் மதுவை பதுக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா பிறப்பித்த அந்த தொகையை 5 பேரும் அரசின் கணக்கில் செலுத்தினர்.சேலம் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா, சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் எஸ்.பி சிவக்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.
டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் 6.5 பவுன் நகை, பணம் திருட்டு
கந்தம்பட்டி மேம்பால நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 50). இவர் மேட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29-ம் தேதி ஊட்டிக்கு சென்று விட்டார், இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் குழந்தைகள் கந்தம்பட்டி கிழக்கு காலனியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், நேற்று சந்திரசேகரன் ஊட்டியில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6.5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சேதுராமன் (61) என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.17 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து சந்திரசேகரன், சேதுராமன் கொடுத்த புகார்களின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu