சேலம் நடராஜன் கிரிக்கெட் மைதானம் ஜூன் 23ல் திறப்பு
Salem News Today: தமிழகத்த்தின் சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், இடது கை வேகப்பந்து வீசுவதில் வல்லவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2017ம் ஆண்டில் விளையாடத் தொடங்கினார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 2015ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் நடராஜன் இடம் பிடித்தார். ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அதே பயணத்தில் அறிமுக வீரராக விளையாடினார். கடந்த 2021ம் ஆண்டில் கடைசியாக இந்திய அணிக்காக அவர் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன், தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.
இந்த மைதானத்தின் திறப்பு விழா வரும் 23ம் தேதி நடைபெறும் என நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கெளரவத் தலைவர் பழனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, நடிகர் யோகி பாபு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக நடராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது கனவாகிய திட்டமான ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ திறப்பு விழாவை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் வருகிற ஜூன் 23ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த திறப்பு விழாவிற்கு நடராஜன் கிரிக்கெட் அகாடமியின் உறுப்பினர்கள் சார்பாக வரவேற்கிறோம். புதிதாக திறக்க உள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைக்க உள்ளார்” என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாக மைதானம் தயாராகும் பதிவுகளை நடராஜன் ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். முன்னதாக, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதிய கிரிக்கெட் மைதானங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu