சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
X
சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதிக்கு இரண்டு இடத்தில் வாக்கு இருப்பதாக சுயேசை சை வேட்பாளர் ராஜா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்புமனு நிறுத்திவைப்பு

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பாளர் ஜி.பி.பாட்டீல் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான பிருந்தா தேவி உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு தொகுதியில் என இரண்டு இடத்தில் வாக்கு இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் ராஜா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதற்கான உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி தற்காலிகமாக செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாகம் எண் 99 வரிசை எண் 551 இல் AWP 1264126 என்ற நம்பரில் ஒரு வாக்கும். சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாகம் எண் 181 இல் வரிசை எண் 187 ஏஎஸ்பி என்ற நம்பரில் ஒரு வாக்கும் என இரண்டு வெவ்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 17, 18 படி கிரிமினல் குற்றம் அவர் வேட்பாளராக இருந்தால் அவரது மனு நிராகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் ராஜாவின் வழக்கறிஞர் இளஞ்செழியன் கூறுகையில், சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தனது வேட்பு மனுவில் தன்மீதான வழக்கு தொடர்பான விவரங்களை மறைத்துள்ளதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் ராஜா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆட்சேபணை மனு அளித்துள்ளார்.

திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டதை மட்டும் குறிப்பிட்டுள்ளார். பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மற்றும் கலர் டிவி ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டதை அவர் குறிப்பிடாமல் மறைத்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் மறைத்துள்ளதாகவும், சேலம் மக்களவைத் தொகுதிக்குள் இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பதையும் ஆட்சேபனையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதி எண் அதிமுக வேட்பாளர் விக்னேஷ், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!