சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
X

கோட்டை மாரியம்மன் கோவில் 

30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்தன.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. 18ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக அம்மன் கருவறை மண்டபம் முன்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜையும், அதன்பிறகு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

காலை 7.40 மணியில் இருந்து 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்கு மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் விழாவையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பழைய பேருந்து நிலையம் வழியாக வரும் பக்தர்கள் பழைய பேருந்துநிலையத்தையொட்டி உள்ள தெற்கு புற நுழைவு வாயில் வழியாக சாமி தரிசனம் செய்து மீண்டும் அதே வழியாக வெளியே செல்லலாம். அதேபோல், திருவள்ளுவர் சிலை, கன்னிகாபரமேஸ்வரி கோவில் வழியாக வரும் பக்தர்கள் கோவிலின் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து கோவிலின் மேற்கு பக்கம் வழியாக வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்கள் அனைவர் மீதும் அவர்கள் நிற்கும் இடத்திலேயே புனித நீரை தெளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கோவிலை சுற்றி ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யும் வகையில் கோவிலை சுற்றி சுகாதாரத்துறை மூலம் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் என 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!