கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள்
கோட்டை மாரியம்மன் கோவிலில் யாக சாலை பூஜை
சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று நாளை மறுநாள் (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து முளைப்பாலிகை இடுதல், புதிய கொடி மரம் பிரதிஷ்டை ஆகியவை நடந்தது. பின்னர் ராஜ கோபுரம் மற்றும் மணிமண்டப விமான கலசங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.
நேற்று கணபதி வழிபாடு, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னர் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்த யானை மற்றும் பக்தர்கள் புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், அக்னி சங்கரண வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு வழிபாடு நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், வேள்வி சாலை பிரவேசம், துவார பூஜை மண்டபார்ச்சனை நடக்கிறது.
தொடர்ந்து முதற்கால வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு முதற்கால பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், தமிழ்முறை ஓதுதல்,மகா தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
நாளை 26ம் தேதி காலை 8 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம் மற்றும் 2-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்படுகிறது.
தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மேல் 2-ம் கால திரவியாஹுதி மற்றும் சதுர்வேத பாராயணம், தமிழ் முறை ஓதுதல் மகா தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டபந்தனம் சாத்தப்படுகிறது.
மாலை 6 மணிக்கு மேல் 3-ம் கால வேள்வி வழிபாடு நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் நாடி சந்தானம், கண் திறப்பு வழிபாடு, தமிழ் திருமுறை ஓதுதல், மகா தீபாராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
நாளை மறுநாள் 27ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் காலை 7.35 மணிக்கு வேள்வி சாலையில் இருந்து தீர்த்தக்கலச குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் 7.40 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மூல மூர்த்தி பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், தசதரிசனம், தசதானம், மகா தீபாராதணை நடைபெறுகிறது. காலை 10.30 மணிமுதல் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்கரதம் புறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu