காசநோய் வில்லைகள் விற்பனையில் சேலம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 73-வது தொகுதி காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழா ஆட்சியர் தலைமையில் இன்று (06.03.2023) நடைபெற்றது.
Salem News Today: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 73-வது தொகுதி காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழா ஆட்சியர் தலைமையில் இன்று (06.03.2023) நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், காசநோய் வில்லைகள் விற்பனையில் கடந்த 11 வருடங்களாக சேலம் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்நிகழ்வு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காசநோய் வில்லைகள் விற்பனை அலுவலர்களுக்கும் மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். மேலும் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.14.03 இலட்சம் மதிப்புள்ள காசநோய் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டு முழு இலக்கு எய்தப்பட்டது. தற்பொழுது 2023-ஆம் ஆண்டுக்கு ரூ.15.03 இலட்சம் மதிப்புள்ள காசநோய் வில்லைகள் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட காசநோய் வில்லைகளின் மதிப்பை விட ரூ.1.00 இலட்சம் கூடுதலாக தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கான 72-வது தொகுதி காசநோய் வில்லைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விற்பனை செய்து முழு இலக்கினை அடைந்த சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோருக்கு முதல் பரிசும், முதல்வர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சேலம் (கிழக்கு), சேலம் (தெற்கு), ஆத்தூர், சங்ககிரி ஆகியோருக்கு இரண்டாம் பரிசும், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆத்தூர், சேலம், மாவட்ட கல்வி அலுவலர் (ஊரகம்) சேலம், நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் ஆகியோருக்கு மூன்றாம் பரிசும் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2022-ஆம் ஆண்டு 73,283 காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்து 4,292 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆண்டு கண்டறியப்பட்ட காசநோயாளிகளில் 87% சதவீதம் நபர்கள் முழுவதும் குணமடைந்துள்ளனர்.
நுரையீரல் பாதிப்பு காசநோய் தொற்றுள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் காற்றின் மூலமாக அருகில் உள்ள நபருக்கு காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காசநோயாளிகள் இரும்பும் போதும் தும்பும் போதும் கைகுட்டை பயன்படுத்துதல் வேண்டும். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முறையாக காசநோய்கான கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக புரத சத்துள்ள ஆரோக்கியமான உணவு வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் காசநோயிலிருந்து முழுமையாக குணமடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட காசநோய் தடுப்புக் கழகத்தின் சார்பில் 73-வது தொகுதி காசநோய் வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், இணை இயக்குநர்(நலப்பணிகள்) வளர்மதி, துணை இயக்குநர் (காசநோய்) கணபதி, துணை இயக்குநர் (சுகாதாரம்) ஜெமினி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மயில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu