சேலம் மாவட்டத்தில் ரூ.783.45 கோடி பயிர் கடன் வழங்கி சாதனை

சேலம் மாவட்டத்தில் ரூ.783.45 கோடி பயிர் கடன் வழங்கி சாதனை
X

பைல் படம்.

2022-2023ம் ஆண்டில் சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேல் கடன் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் கூட்டுறவுத்துறை மூலம் 1,00,655 விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.783.45 கோடியும், 24,195 விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடனாக ரூ.98.74 கோடியும் ஆக மொத்தம் 1,24,850 விவசாயிகளுக்கு ரூ.882.19 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 205 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 5 பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் கடனை முழுவதும் திருப்பி செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து, அவர்களுக்கு கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க 2022-2023-ஆம் ஆண்டுக்கு அரசு நிர்ணயித்த ஆண்டுக் குறியீடு ரூ.660 கோடியையும் தாண்டி 1,00,655 விவசாயிகளுக்கு ரூ.783.45 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 114% எய்தி சாதனை படைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் 25,837 விவசாயிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு இவர்களுக்கு ரூ.148.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கே.சி.சி. திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2021-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் 24,195 விவசாயிகளுக்கு ரூ.98.74 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

NHFDC திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023-ஆம் ஆண்டில் 1,486 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி 2021 திட்டத்தின் கீழ் 5,241 மகளிர் சுய உதவிக்குழுக்கள் (51,023 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்) கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற ரூ.134.40 கோடி கடனை தமிழ்நாடு அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 3,696 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு (47,808 மகளிர் குழு உறுப்பினர்கள்) ரூ.153.81 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த இலக்கு ரூ.137.93 கோடியைத் தாண்டி கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன், சுயஉதவிக்குழு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக்கடன், வீடு அடமானக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம் எனவும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் பெற்று பயனடையலாம் எனவும், ஆகவே, சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை அணுகி தங்களுக்குத் தேவையான கடன்களை பெற்று, தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு