சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு…
X

சேலத்தில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

சேலத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில், மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்களை நடத்திட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.


அதன்படி, லம் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை, பட்டிமன்றம் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022 வரையிலும், வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022 வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, வட்டார அளவில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று தொடங்கியது.

சேலம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் சேலம் புனித பால் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. போட்டிகளை, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டிகள் 10.12.2022 வரை நான்கு நாட்கள் புனிதபால் மேல்நிலைப் பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணக்காடு நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறுமலர் துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் நடைபெறும் இந்தக் கலைத் திருவிழாவில் 207 வகையான போட்டிகளில் 15 ஆயிரத்து 365 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

கலைத் திருவிழா தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், சேலம் மாநகராட்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்