சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்: அமைச்சர் திறப்பு
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேலம், அஸ்தம்பட்டி செரி சாலையில் சேலம் சந்தை மற்றும் சேலம் நகரம் இரயில்வே நிலையங்களுக்கிடையில் அமைக்கப்பட்டுள்ள ரூ.129.20 கோடி மதிப்பீட்டிலான முள்ளுவாடி கேட் இரயில்வே சாலை மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான மேம்பாலப் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பொன்னமாபேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ள முள்ளுவாடி கேட் மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள முறையில் அமைந்துள்ளது. இவ்வாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம், முள்ளுவாடி கேட் மேம்பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து, மேம்பாலம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமாராணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu