குடியரசு தின விழா: தேசியக்கொடியை ஏற்றிவைத்த சேலம் ஆட்சியர்

குடியரசு தின விழா: தேசியக்கொடியை ஏற்றிவைத்த சேலம் ஆட்சியர்
X

காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் ஆட்சியர் கார்மேகம்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம் ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்தியத் திருநாட்டின் குடியரசு தின விழாவினை முன்னிட்டு, சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா இன்று (26.01.2024) சிறப்பாக நடைபெற்றது. இக்குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மேலும், இவ்விழாவில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 166 காவல் துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 77 அலுவலர்கள் மற்றும் 112 காவல்துறையினருக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள், எல்லைப்போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கதர் ஆடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.

மேலும், இவ்விழாவில் மாற்றுத்தினாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.19.41 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தேசபக்தி, நாட்டுப்புறக் கலைகள் மற்றும் தமிழ்மொழியின் மேன்மையும், தமிழ் தலைவர்களின் பெருமையும் உள்ளிட்ட தலைப்புகளில் சுமார் 1,667 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவு கல்வெட்டிற்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில், சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் உமா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்