சேலம் மாநகராட்சியில் 30ம் தேதிக்குள் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை
சேலம் மாநகராட்சியில் 30ம் தேதிக்குள் வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.
மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், சொத்து வரி வசூலிக்க வீடு தேடி வரும் வரி வசூலிப்பாளர்களிடமோ, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்களிலோ செலுத்தலாம். மேலும் கடன், பற்று அட்டை, காசோலை, வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் செலுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி விரைவில் சொத்து வரியை செலுத்தி மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
அதேபோல் மலக்கசடு, கழிவு நீர் அகற்றும் பணி மேற்கொள்ளும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. அதன்படி சேலம் மாநகராட்சி மற்றும் கருப்பூர், அயோத்தியாப்பட்டனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் சேலம் மாநகராட்சியில் ரூ. 2 ஆயிரம் செலுத்தி 2 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் உரிய உரிமம் பெற வேண்டும். மேலும் சேகரிக்கப்படும் கழிவுநீரை மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் விநியோம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் வாரியத்தால் மின் பராமரிப்பு பணிகள் நாளை (21.04.2023) மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் தொட்டில் பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் ஒரு நாள் மட்டும் செயல்படாது. எனவே மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆகையால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu