தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு பணிகள் தீவிரம்: அமைச்சர்கள் ஆய்வு
மாநாட்டு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அந்த பேரணி 234 தொகுதிகளுக்கும் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களை அமைச்சர் கே.என்.நேரு பாராட்டியதுடன் தானும் மோட்டார் சைக்கிளை ஓட்டி உற்சாகப்படுத்தினார்.
மாநாட்டு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றும் வரும் நிலையில் பந்தலுக்காக பில்லர்கள் நடப்பட்டு விரைவில் தகர கூரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பிரம்மாண்ட முகப்பு தோற்றத்துடன் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தினமும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் உணவு உண்ணக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வை யிட்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட அவை தலைவர் கருணாநிதி, உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu