சேலம் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
சேலம் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.
சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வரும் 22.11.2023 முதல் 03.12.2023 வரை நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (30.10.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 22.11.2023 முதல் 03.12.2023 வரை 12 நாட்கள் புத்தகத் திருவிழா சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படவுள்ளது. இதில் கடந்த ஆண்டைப் போன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் பங்கேற்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுப் பணிகள் தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் பயன்பெரும் வகையில் 250க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகளுடன் அறிவுசார்ந்த பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
குறிப்பாக, "வரலாற்றுப் பாதையில் சேலம்" என்ற தலைப்பிலான அரங்கு, சாகித்ய அகாதமி, ஞானபீடம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெறப்பட்ட புத்தகங்கள் காட்சி படுத்தப்பட்ட அரங்குகள், பழமையான ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் அடங்கிய அரங்குகள், சிறந்த புகைப்படங்கள், சிறந்த குறும்படங்கள், புதிய படைப்பாற்றல் கொண்ட அறிவியல் கண்காட்சி அரங்குகள் என பழமையும், புதுமையும் ஒருங்கிணைந்த கண்காட்சி அரங்குகளை இப்புத்தகத் திருவிழாவில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேப்போன்று மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெருவதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக தனி அரங்கு, வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கம் மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் என பல்வேறு தரப்பினரும் பயன்பெரும் வகையில் அரங்குகள் அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் தலைசிறந்த பேச்சாளர்கள் வருகைப் புரிந்து இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கவுள்ளனர். எனவே, சேலத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் புத்தகக் கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வருகைபுரிந்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், சேலம் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் பதிப்பாளர், பபாசி செயலாளர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu