சேலம் புத்தகத் திருவிழா: அமைச்சர் கே.என்.நேரு நாளை துவக்கம்
புத்தகத் திருவிழா தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (20.11.2023) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா-2023 நாளை 21.11.2023, செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி 03.12.2023, ஞாயிற்றுக்கிழமை வரை சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ள சேலம் புத்தகத் திருவிழாவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயன்பெறவும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களை புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து அவர்கள் பார்வையிட ஏற்பாடுகளைச் செய்திடவும், மாணவ, மாணவிகளுக்கிடையே கலை மற்றும் இலக்கியம் நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் புதிய படைப்புகளை புத்தகத்திருவிழா நடைபெறும் நாள்களில் வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அரங்குகளில் சேலம் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தி அப்படைப்புகள் சார்ந்த உரையாடல் நடைபெறும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நூல் விற்பனையகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைத்திடவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரங்குகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையிலான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாவட்ட நூலக அலுவலர் பாலசுப்பிரமணியம், சேலம் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் பதிப்பாளர், பபாசி செயலாளர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu