சேலம் பெண்களிடம் ரு.7.45 லட்சம் மோசடி: கிரைம் செய்திகள்...

சேலம் பெண்களிடம் ரு.7.45 லட்சம் மோசடி: கிரைம் செய்திகள்...
X

பைல் படம்.

Salem News Today: சேலத்தில் பெண்கள் இருவரிடம் ஆன்லைனில் ரூ.7.45 லட்சத்தை ஏமாற்றியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகரின் உடையாப்பட்டியில் வசித்து வருபவர் மோகனம்மாள் (34). இவருக்கு இன்ஸ்டாகிராமில் பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்த விளம்பர அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த நபர், இன்ஸ்டாகிராமில் ஒரு டாஸ்க் அனுப்பியுள்ளார். இந்த டாஸ்கிற்காக குறிப்பிட்ட பணத்தை அனுப்புமாறும் கேட்டுள்ளார். இதை உண்மை என நமபிய மோகனம்பாள், பல்வேறு தவணையாக அவரது வங்கி கணக்குக்கு ரூ. 5 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினார். அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகனம்மாள் இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பட்குதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (28). இவரிடமும் ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறி ரூ. 2 லட்சத்து 38 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ரஞ்சிதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மளிகை கடையில் தகராறில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு

சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரைபாப்பம்பாடி பகுதியில் வசித்து வருபவர் மணி (55). இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தவமணி. அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில் மனைவி கற்பகம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி விட்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் வந்து சேரவில்லை. சம்பவத்தன்று மளிகை கடையில் தவமணி இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கற்பகத்திடம், கடந்த முறை பொருட்கள் வாங்கியதற்கான பணம் வரவில்லை என்று தவமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கற்பகம், தவமணியை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கற்பகம் மீது இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரயிலில் அடிபட்டு அரசு ஊழியர் உயிரிழப்பு

சேலம் திருவாக்கவுண்டனூர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). இவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மங்களூர்-சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சீனிவாசன் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ஜங்சன் ரெயில் நிலைய மேலாளர் செல்வராஜ், ரெயில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வர மூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். ரெயில்வே போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு