மினி ஜவுளிப்பூங்காக்கள் அமைக்க ரூ.2.50 கோடி நிதியுதவி: ஆட்சியர் தகவல்

மினி ஜவுளிப்பூங்காக்கள் அமைக்க ரூ.2.50 கோடி நிதியுதவி: ஆட்சியர் தகவல்
X

சேலம் ஆட்சியர் பிருந்தா.

சேலம் மாவட்டத்தில் மினி ஜவுளிப்பூங்காக்கள் அமைக்க ரூ.2.50 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதற்கு 50 சதவீதம் அரசு மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட குட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஜவுளித் தொழில்முனைவோர்களுடன் 01.07.2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் (Mini Textile Park) அமைப்பதற்கு நிலம், உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுசுவர், கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி (including captive power plant) மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகிய உட்பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் நிலம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் தவிர்த்து பிற இனங்கள் அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, 1A-2/1,சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம்- 636006 என்ற முகவரியிலோ, 0427- 2913006 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ, ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!