சேலம் மாவட்ட அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் சங்கர், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (26.12.2023) நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சென்றுசேரும் வகையில் தொடங்கப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் என 142 இடங்களில் முதற்கட்டமாக 2023 டிசம்பர் 18 முதல் 2024 ஜனவரி 6-ம் தேதி வரை நடத்திட திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வுகாணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சமத்துவபுரம் புனரமைப்புப் பணிகள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டப்பட்டுவரும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பார்த இயக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் சமூக கழிப்பறைகள், தனி நபர் இல்லக் கழிப்பறைகள், அம்ரூத் 2.0 திட்டம் உள்ளிட்டவைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வழங்கப்படும் உட்பிரிவு பட்டா உள்ளிட்ட பல்வேறு பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்தும், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் செயலாக்கத்துறையின் மூலம் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிறப்புத் திட்ட செயல்படுத்தப்பட்டுவரும் நான் முதல்வன் திட்டம், முதல்வரின் முகவரித் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமெனவும், அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் சங்கர் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலை முதல் தாரமங்கலம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள ரூ.45.15 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், சேலம், நெத்திமேடு பகுதியில் நடைபெற்றுவரும் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu