பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு தர மறுப்பு.. இருதரப்பினரிடையே மோதல் (கிரைம் செய்திகள்)

பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு தர மறுப்பு.. இருதரப்பினரிடையே மோதல் (கிரைம் செய்திகள்)
X
சேலத்தில் பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு தர மறுப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

சேலம் முகமது புறா பகுதியில் வசித்துவருபவர் ஷாஜகான். இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று 10 பரோட்டாக்களை வாங்கியுள்ளார். அதற்கு கூடுதலாக குழம்பு கேட்டுள்ளார் ஷாஜகான்.

ஆனால் ஓட்டல் மேலாளர் கொடுக்க மறுக்கவே , அவர்களிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டதில் ஷாஜகான் கீழே விழுந்து காயமடைந்தார். இதனையடுத்து ஓட்டலின் முன் திரண்ட ஷாஜகான் தரப்பினருக்கும், கடையின் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்த சேலம் டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து செய்தனர். இந்த மோதல் குறித்து இருதரப்பை சேர்ந்தவர்களும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்த 8-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஷாஜகான் தரப்பை சேர்ந்தவர் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள், ஷாஜகானை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு மிரட்டல்

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது53). இவர் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கலா. இவர், ஆத்தூர் டவுன் போலீசில் கொடுத்த மனுவில், எங்களுடைய மகன் சஞ்சய், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். தற்போது மந்தைவெளி பகுதியை சேர்ந்த கண்ணையன், ரமேஷ், சுரேஷ் ஆகிய 3 பேரும் என்னுடைய மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணையன் உள்பட 3 பேரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டியிடம் நகைக்கொள்ளை: இருவர் கைது

சேலம் அடுத்த அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி கக்கன் காலனியைச் சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி பெருமாயி (வயது70). இவர் கடந்த 31ம் தேதி காலை இவரது வீட்டிற்கு டூவீலரில் இருவர் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம் வெள்ளி, தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வின்குமார் (30). கிஷான்லால் (34) ஆகியோர் மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story