வங்கியில் மீட்கப்பட்ட அடமான நகை போலி : தனியாா் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

சேலம் : வங்கியில் மீட்கப்பட்ட அடமான நகை போலி எனத் தெரிய வந்ததையடுத்து, பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கல்பாரப்பட்டி மலங்காடு பகுதியைச் சோ்ந்த ராஜா ( 23) என்பவா் இளம்பிள்ளையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் கடந்த 2023 இல் நகையை அடமானம் வைத்து கடனாக ரூ. 2.35 ஆயிரம் பெற்றிருந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கடனை திருப்பிச் செலுத்திய ராஜாவிடம் வங்கி ஊழியா் நகையை திருப்பி வழங்கினாா். அந்த நகையின் தரம் குறித்து மற்றொரு வங்கியின் ஊழியரிடம் காண்பித்த போது, அது போலி எனத் தெரிய வந்தது. இதையடுத்து மீண்டும் அந்த நகையை வங்கி ஊழியரிடம் கொடுக்க முயன்ற போது, அதை வாங்க மறுத்துவிட்டனா். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த ராஜாவின் உறவினா்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி உதவி ஆய்வாளா் ஆனந்த் விசாரணை மேற்கொண்டாா்.
இதனிடையே, ராஜாதான் நகையை மாற்றி கொண்டுவந்ததாக வங்கி ஊழியா்கள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜாவின் உறவினா்கள் வங்கியின் நுழைவு வாயிலில் தா்னாவில் ஈடுபட்டனா். வங்கி ஊழியரிடம் ராஜாவின் நகை வங்கியில் தற்போது உள்ளது என எழுதி பெற்று தந்த பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu