பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்க எதிர்ப்பு
ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் , விசிக, திராவிட விடுதலை கழகம், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் பெரியார் கலையரங்கில் தொடங்கியது. இவ்விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
முன்னதாக இன்று காலை திட்டமிட்டப்படி சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இதையடுத்து இன்று காலை சுமார் 11 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விழா நடக்கும் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கூடாது என கூறி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முன்பு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலை கழகம், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கட்சி கொடிகள், கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார். பா.ஜ.க. ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகிறார் என கூறி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்னர். அவர்கள் ஆளுநர் வரும் சாலையில் வந்து விடக்கூடாது என்பதற்காக இரும்பு பேரிகார்டு அமைத்து அரண் போல் நின்று தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வழியாக ஆளுநரின் கார் வந்தது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்குள் கார் சென்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது.
மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், மாநகர துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu