சேலத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்க முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்
அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
சேலம் போஸ் மைதானத்தில், 2024 சேலம் அரசுப் பொருட்காட்சி ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (29.07.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
சேலம், போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி - 2024 ஆகஸ்டு திங்கள் முதல் வாரத்தில் தொடங்கி, 45 நாள்கள் நடைபெறவுள்ளதையொட்டி இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்றையதினம் நடத்தப்பட்டுள்ளது.
சேலம், போஸ் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்படவுள்ள அரசு பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து மென்மேலும் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, செய்தி-மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மை 1 - உழவர் நலத் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக் கல்வித்துறை, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுற்றுச்சூழல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகள் அரசின் நிதி ஒதுக்கீடு மூலம் அரசுப் பொருட்காட்சியில் பங்குபெறுகின்றனர்.
மேலும், சேலம் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஆவின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகள் தத்தம் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி, அரசுப் பொருட்காட்சியில் பங்குபெறுகின்றனர்.
அரசுப் பொருட்காட்சி நடைபெறும் மேற்கண்ட நாள்களில் காவல் துறையினர் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பொருட்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் 108 ஆம்புலன்ஸ் வசதிகள், பொருட்காட்சி மைதானத்தில் நாள்தோறும் முதலுதவி மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை செய்வதற்காக ஒரு மருத்துவர் தலைமையிலான குழு அமைக்க ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீயணைப்பு வண்டியை, உரிய அலுவலர்களுடன் பொருட்காட்சி மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் இராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் உரிய உறுதித் தன்மையுடனும், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதை, சேலம் மாநகராட்சி சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்துத் தரப்பு மக்களும் தமிழ்நாடு அரசின் திட்டங்களை மென்மேலும் அறிந்து பயன்பெறும் வகையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் தங்கள் துறையின் பொருட்காட்சி அரங்குகளை சிறப்பான முறையில் அமைத்து, பொருட்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் அதற்கான பொறுப்பு அலுவலர்களை நியமித்து, தங்கள் துறை தொடர்பாக பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை வழங்கி, இப்பொருட்காட்சி சிறப்பாக அமைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், அம்மாப்பேட்டை மண்டல உதவி ஆணையர் வேடியப்பன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பாரதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதிரன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu