சேலம் மாவட்டத்தில் கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்
பைல் படம்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி இருவார முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
இராணிகட் என்னும் வெள்ளைக்கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வெள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த சில கோழிகள் தலையை இரண்டுகால்களுக்கு இடையில் செருகிக் கொள்ளும் இதனால் இதனை கொக்கு நோய் என்றும் கூறுவர் கோழிகளில் இறப்பும் ஏற்படும்.
சேலம் மாவட்டத்தில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவின்படி கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் வரும் 01.02.2023 முதல் 14.02.2023 வரை நடத்தடப்படவுள்ளது. இம்முகாம்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து புறக்கடை கோழிகளுக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்தட 4.372 இலட்சம் டோஸ்கள் வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
எனவே. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர் அனைவரும் அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் அவர்களது 8 வாரம் முதல் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி போட்டு தங்களது கோழிகளை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu