நாள் முழுவதும் பிணக்கோலம்.. திருவிழாவில் பக்தர் விநோத நேர்த்திக்கடன்
பிணக்கோலத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.
Salem News Today: சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன், காளியம்மன் கோவிலும் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி சிறுவர், சிறுமிகளின் சிலம்பாட்டம், மல்லர் கம்பத்தில் ஏறுதல் மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து பக்தர்களின் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், திருவிழாவில் பிணக்கோலத்தில் படுத்த நிலையில் பக்தர் ஒருவர் தனது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். இதற்காக நேற்று காலையில் அந்த பக்தர் படுக்கையில் பிணம் போல் படுத்து ஆடாமல் அசையாமல் இருந்தார்.
மேலும் இந்த வினோத நேர்த்திக்கடனுக்காக கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு பிணம் போன்று படுத்திருந்த பக்தருக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் உடன் இருந்த மற்ற பக்தர்கள் செய்தனர். மேலும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை போல் வந்து துக்கம் விசாரித்து சென்றனர்.
பின்னர் பாடையில் பக்தரை தூக்கி வைத்து இறுதி ஊர்வலமாக சரக்கு வாகனம் ஒன்றில் பூக்களால் அலங்கரித்து தெருத்தெருவாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கொண்டலாம்பட்டியில் உள்ள மயானத்திற்கு ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு ஒரு கோழியை மட்டும் புதைத்தனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கோவிலுக்கு திரும்பி வந்தனர்.
மேலும் பிணம் போன்று படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் உள்பட அவருடன் வந்தவர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டு சென்றனர். சவ ஊர்வல வினோத நேர்த்திக்கடன் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu