பெத்தநாயக்கன்பாளையம் அருகே மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிடும் ஆட்சியர் கார்மேகம்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்ன கல்ராயன்மலை தெற்குநாடு ஊராட்சி, பகடுப்பட்டு கிராமத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று (12.12.2023) நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்களில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் கடைகோடி கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த கிராமத்திற்கு சென்று அரசு அலுவலர்கள் அனைவரும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உரிய பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்னகல்யாரன்மலை தெற்குநாடு ஊராட்சி, பகடுப்பட்டு கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. மாவட்ட நிலையிலான அலுவலர்கள் இன்று காலை முதல் பல்வேறு குழுக்களாக நேரடியாகச் சென்று, சின்னகல்யாரன்மலை தெற்குநாடு ஊராட்சிக்குட்பட்ட 23 குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகள் மற்றும் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள 14 வட்டங்களிலும் மக்கள் சந்திப்பு முகாம் ஒரு சுற்று முடிவுற்று, இரண்டாம் சுற்றை தற்பொழுது தொடங்கியுள்ளோம். குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள தொலை தூரத்தில் உள்ள கிராமங்களையும், பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களையும் இதில் தேர்வு செய்துள்ளோம். இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 80 மனுக்களும், பட்டா மாறுதல் மற்றும் தனிப்பட்டா கோரி 279 மனுக்களும், குடும்ப அட்டை கோரி 5 மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வேண்டி 5 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 19 மனுக்களும், சாலை வசதி, தண்ணீர் தொட்டி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் கோரி 18 மனுக்களும், மின் இணைப்பு வேண்டி 21 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 2 மனுக்களும், சான்றிதழ் கோரி 6 மனுக்களும், இதர 11 மனுக்கள் என மொத்தம் 446 மனுக்கள் பொதுமக்கள் நேரடியாக கொடுத்துள்ளனர்.
இம்முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களை வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவராத விஷயங்களைக் கூட ஆய்விற்குச் சென்று அலுவலர்கள் கண்டறிந்து கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். எனவே இப்பணிகளின் மீது விரைவாக தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
இந்த மலைக்கிராமத்தில் சாலை வசதிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இக்கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இம்மலை கிராமத்திற்குத் தேவைப்படும் வசதிகள் செய்து கொடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. 6,000 மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் சிறப்பு கவனம் எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநிலம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உண்டி உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருவதால் இங்கு கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் தேவை இருப்பின் அதனை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. கூடுதல் நியாய விலைக்கடை வசதி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வார். மேலும், இப்பகுதியில் நடமாடும் நியாய விலைக்கடை வசதியும் ஏற்படுத்தித்தரப்படும்.
குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க சுகாதாரத் துறை மூலம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. மேலும், தவறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்பகுதி தோட்டக்கலைப் பயிர்கள் அதிகம் விளைவிக்கக் கூடிய பகுதி என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி தோட்டக்கலைப் பயிர்கள் ஊக்குவிக்கப்படும். மேலும் சாலை வசதிகள், தண்ணீர் தொட்டிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் மேற்கொள்ளப்படும்.
இன்றைய தினம் கல்விக் கடனுதவி கோரி விண்ணப்பித்துள்ள மாணவருக்கு நாளைய தினமே காசோலை வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கும் தேவையான உதவிகள் விரைவாக செய்து தரப்படும். மேலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறப்படுகிறது. இம்மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் கூட்டுறவுத்துறையின் சார்பில் சின்ன கல்ராயன் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு ரூ.38 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், மகளிர் திட்டத்தின் சார்பில் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.1.16 கோடி மதிப்பிலான கடனுதவிகளும், வருவாய்த் துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விலையில்லா தையல் இயந்திரம் என மொத்தம் 149 நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறைகளின் மூலம் என ஆக மொத்தம் 197 பயனாளிகளுக்கு ரூ.1.59 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு அரசுத்துறைகளில் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ள பயனாளிகள் இதனை மென்மேலும் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu