சேலத்தில் களை கட்டிய ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை
சேலம் மலர் சந்தை - கோப்புப்படம்
ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாபேட்டை, பட்டைக்கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பல் பூசணியை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
இதேபோல், பால் மார்க்கெட் பகுதியிலும் பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15க்கும், 7 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120க்கும், நிலக்கடலை ரூ.150க்கும், அவல் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து வியாபாரம் செய்தனர். சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக நடந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரையும், திராட்சை கிலோ ரூ.100க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80க்கும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.80க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட பழங்கள் விற்பனை கூடுதலாக நடந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையம் யொட்டி உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.
சன்ன மல்லிகை ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.280-க்கும், சாமந்தி கிலோ ரூ.120 முதல் 200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், அரளி பூக்கள் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை ஆகிறது.
இந்த மார்க்கெட்டுக்கு பூசாரிப்பட்டி, அரியனூர், சீரகாபாடி, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு விவசாயிகள் சாமந்தி பூக்கள் கொண்டு வருகின்றனர். பட்டர் ரோஸ் பெங்களூருவில் இருந்து வருகிறது. அரளிப்பூக்கள் பனமரத்துப்பட்டி, திருமனூர் வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மல்லிகை பூ மல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், குண்டுமல்லி பனமரத்துப்பட்டி பகுதியில் இருந்தும் முல்லை பூக்கள், கன்னங்குறிச்சி, வீராணம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். அதேபோல் ஆயுத பூஜையை முன்னிட்டு வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu