ராஜாபாளையம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: 117 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ராஜாபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 117 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Salem News Today: சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், வேம்படிதாளம் குறுவட்டம், ராஜாபாளையம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (20.04.2023) நடைபெற்றது.
இம்முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், வேம்படிதாளம் குறுவட்டம், ராஜாபாளையத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இந்த ராஜாபாளையம் கிராமம் 8,038 மக்கள் தொகை கொண்டது. இம்மக்கள் சந்திப்பு முகாமில் ராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டிப்பட்டி காட்டுவளவு, அரிமா நகர், அசலியான் காடு, கரிக்கட்டாம் பாளையம், நைனாம்பட்டி, நைனாம்பட்டி மல்லேஸ்வரன் கோவில் காடு, பாப்பு காடு, ஆர்.பெத்தாம்பட்டி, ஆதி திராவிடர் காலனி, காந்தி நகர், ராஜீவ் காந்தி நகர், ராஜாபாளையம், நைனாம்பட்டி சேலம் மெயின் ரோடு, பாறைக்காடு, சின்ன ஆண்டிப்பட்டி, பள்ளக்காடு, பனங்காடு, கலர் காடு, பெத்தாம்பட்டி சேலம் ரோடு, பெருமாள் கோவில் காடு ஆகிய 20 குக்கிராமங்களுக்கும் மாவட்ட நிலையிலான அலுவலர்கள் பல்வேறு குழுக்களாக இன்று காலை முதல் மேற்கண்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று, ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது மேற்குறிப்பிடப்பட்டுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து அதன் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 600 கி.மீ கிராம சாலைகளை தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் சுமார் ரூ.1000 கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.990 கோடி கடன்கள் வழங்கப்படவுள்ளது.
ராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாலின விகித பாகுபாடுகளை சரிசெய்யும் பொருட்டு சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியினை 100 சதவிகித எழுத்தறிவு கொண்டு பகுதியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கென அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயில்பவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை, அரசு பணியில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இ ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை பெண்கள் தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்திட வேண்டும்.
இன்றைய மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, மின் விளக்குகள், சாலை வசதிகள், பேருந்து நிலையம், குடிநீர் வசதி, வீடு மராமத்து பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி பல்வேறு மனுக்களை வழங்கியுள்ளனர். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களையும் கடைகோடி வரை சென்றுசேர்வதை உறுதி செய்திடும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த மக்கள் தொடர்பு முகாமில் மனு அளித்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள், வருவாய்துறையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை கொண்டு அம்மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக இந்த நிகழ்ச்சியிலேயே 5 மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவி தொகையாக ரூ.2,000/- வழங்கப்படுவதற்குரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 117 பயனாளிகளுக்கு ரூ.19 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகள் மென்மேலும் தங்கள் வாழ்வில் முன்னேற இந்நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இம்முகாமில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) மாறன், அட்மா குழுத் தலைவர் வெண்ணிலா சேகர், கால்நடைபராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.தே.புருசோத்தமன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, சேலம் தெற்கு வட்டாட்சியர் செல்லதுரை, ராஜாபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ரமேஷ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu