மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பான செயல்பாடு: மருத்துவமனைகளுக்கு ஆட்சியர் பாராட்டு
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி
மக்கள் ஆரோக்கியத் திட்டம் கடந்த 23.09.2018 முதல் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்றைய தினம் இத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.தனபால் மற்றும் சேலம் தரண் தனியார் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் திரு.செந்தில்குமார் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கடந்த 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் வரை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 63 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தொடங்கியது முதல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,53,096 பயனாளிகளுக்கு ரூ.500.58 கோடி சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6,31,487 குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று (ரூ.120 இலட்சம் மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடை எண் 7-இல் செயல்பட்டுவரும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.கு.நெடுமாறன், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் திரு.முரளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu