விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் அரசு முதன்மை அலுவலர்கள் மட்டுமே அனுமதி: ஆட்சியர்

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் அரசு முதன்மை அலுவலர்கள் மட்டுமே அனுமதி: ஆட்சியர்
X

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில்  நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு முதன்மை அலுவலர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (02.02.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 5,572 மெட்ரிக் டன்னும், டிஏபி 1,867 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3,313 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 15,035 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 25,787 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 2023-ம் மாதம் முடிய 1,95,526.1 எக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 11.20 மி.மீ மழை பெய்துள்ளது.

மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறையின் அரசு முதன்மை அலுவலர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி, கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் (பொ) ஆர்.எஸ்.டி.பாபு மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ந. நீலாம்பாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!