தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல் செய்துகொள்ள புதிய வசதி
பைல் படம்.
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல் செய்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும்.
குடிமை குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும். இதர ஓய்வூதியங்கள் மற்றும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் முதன்முதலில் வழங்கப்பட்ட மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும். இரண்டு ஓய்வூதியம் பெறுகின்ற ஓய்வூதியதாரர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நேர்காணல் இரண்டிற்கும் சேர்த்து செய்து கொள்ளலாம்.
தற்போது அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆண்டுதோறும் நேர்காணல் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் ஓய்வு பெற்றவர்கள் ஜூலை மாதத்திற்குள் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 2023 முதல் டிசம்பர் 2023 வரை மற்றும் ஜனவரி 2024 முதல் மார்ச் 2024 வரை அவரவர் தாம் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் அடுத்த மாதம் வரை நேர்காணல் முடித்துக் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்டவாறு ஓய்வூதியதாரர்கள் நேர்காணல் செய்ய இயலாமல் இருந்தால் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம், இ-சேவை மையம், பொது சேவை மையம், கேபிள் டிவி இ-சேவை மையம், ஜீவன் பிரமான் செயலி மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தூதரகம் மூலமாகவும், நேர்காணல் செய்திட உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஓய்வூதியதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu