சேலத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவக்கம்
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து, பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகளை வழங்கினார்.
சேலம், கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாமினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து, பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி, மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, இச்சிறப்பு முகாமானது சேலம் மாவட்டத்தில் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது. இம்முகாமில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயதுடைய பெண்களுக்கும் (கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும், இதில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 16.02.2024 அன்று நடைபெறுகிறது.
இம்முகாமானது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. மேலும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நடைபெறுகிறது. குடற்புழு நீக்கத்தினால் ஏற்படும் நன்மைகளான இரத்த சோகையைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும், குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதும் அதிகரிக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய 11,11,084 குழந்தைகள் மற்றும் 20-30 வயதுடைய 2,24,827 பெண்களும் பயனடைகின்றனர். பொது சுகாதாரத் துறை, பள்ளி கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்த களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி, இணை இயக்குநர் நலப் பணிகள் (பொ) வளர்மதி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் சௌண்டம்மாள், மாநகர் நல அலுவலர் யோகானந்த், அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமாராணி, பள்ளி தலைமை ஆசிரியயை அனிதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu