சேலம் நகரின் முக்கிய இடங்களில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்

சேலம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது
சேலம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை நேற்று கோலாகலமாக கொண்டாடினர். நேற்று அதிகாலை முதல் பள்ளிவாசல்களில் திரண்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சேலம் மாநகரில் உள்ள ஜாமிய மஸ்ஜித், ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம், கோட்டை மஸ்ஜித், பொன்னம்மாபேட்டை மஸ்ஜித், குமாரசாமிபட்டி ரஹ்மான்யா மஸ்ஜித், 4 ரோடு மக்மூர் மஸ்ஜித், முள்ளுவாடி கேட் மஸ்ஜித் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள முகமது பள்ளிவாசலில் இருந்து முத்தவல்லி ரஜாக் தலைமையில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரண்டு கடைவீதி, தாலுகா அலுவலகம் வழியாக ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு கலீல் அஜ்ரத், காஜாமைதீன் ஆகியோர் தலைமையில் காலை 9:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி அருகே இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று அய்யன்காட்டுவளவு பகுதியில் வருவாய்த்துறையினரால் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் மதினா ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்ததில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அதேபோல், ஆத்தூர் புதுப்பேட்டை, நரசிங்கபுரம், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu