ஓமலுார் அருகே காலை உணவுத்திட்ட துவக்க நிகழ்ச்சி: எம்.பி. , கலெக்டர் பங்கேற்பு
ஓமலூர் அருகே காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை எம்பி., ஆட்சியர் துவக்கி வைத்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து இன்று முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:
“பசிப் பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ? கூறுமின், எமக்கே” என்ற சங்க இலக்கியமான புறநானூரில் கூறியபடி பசித்த வயிற்றுக்கு உணவு அளிப்பவர்கள் பெரும் கொடையாளர்கள் மட்டுமல்ல, அவர்கள் மருத்துவர்களுக்கும் ஒப்பானவர்கள் என்று தமிழ் மரபு கூறுகிறது. அதனடிப்படையில், முதல்வர் உன்னத நோக்குடன் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தினை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமைகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,418 பள்ளிகளில் பயின்றுவரும் 1,01,318 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். எனவே, எவ்வழியில் கல்வி பயின்று வருகிறோம் என்பது ஒரு தடையாக இருக்காது. இதற்கு எடுத்துக்காட்டாக சந்திரயான் 3 திட்ட இயக்குனர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு, புத்தக வாசிப்பு, வெளியூர் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இத்திட்டத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் பேசியதாவது:
பள்ளிக் குழந்தைகள் ஊட்டச்சத்தோடும், வலிமையாக வளரவும், தங்குதடையின்றி பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், குழந்தைகள் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தினைச் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பு மற்றும் கல்விக்கான முக்கியத்துவம் என்பது எப்பொழுதும் மிகவும் அதிகமாகவே இருக்கும். கல்விதான் எதிர்காலத்தின் மிகப் பெரிய சொத்து என்பதை உணர்ந்து தொடக்கப் பள்ளி முதல் உயர் கல்வி வரையிலான அனைத்து கட்டமைப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ள காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும். இச்சிறப்புமிக்க இப்பள்ளியைத் தேர்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) ரேச்சல் கலைச் செல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஓமலூர் வட்டாட்சியர் புருசோத்தமன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி இராஜா, காமலாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பழனிக்கவுண்டர் உட்பட தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu