சேலம், மேட்டூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் அமைச்சர் ஆய்வு

சேலம், மேட்டூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் அமைச்சர் ஆய்வு
X

சேலத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Salem news today - மேட்டூர் மற்றும் சேலத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் மற்றும் சேலத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின், சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளையும் சிறப்பாகச் செயல்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கிடும் வகையில் தமிழக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்நாட்டில் அதிக கோவில்கள் அமையப்பெற்றுள்ளதால் இதன் பழமை, கலை, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் அதிகளவிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

நவீன காலமாற்றத்திற்கேற்ப சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம், மேட்டூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர் அணைப் பூங்காவை சுற்றுலாத் துறையின் மூலம் பராமரித்திட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தொடர்புடைய துறையின் மூலம் கருத்துரு கிடைக்கப்பெற்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், சேலம் மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி மேயர் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளைய தினம் ஏற்காட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குயிக் பைட்ஸ் எனும் சிறு உணவகம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும், ஏற்காட்டில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் படகுக் குழாம் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய உள்ளோம். சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து ஹோட்டல்களையும் தனியார் ஹோட்டகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும்.

ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்காடு சுற்றுலாத்தளத்தில் நில சீரமைப்பு, காட்சி முனை, உட்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. மேலும், ஏற்காடு, கொடைக்காணல், ஊட்டி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள படகு இல்லங்களில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மிதவை உணவகங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்காட்டில் உள்ள எமரால்டு ஏரியில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சார்ந்த ஒலி, ஒளி காட்சியும் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், துணை மேயர் .மா.சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் மற்றும் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.தணிகாச்சலம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!