அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை 17ம் தேதி) பிற்பகல் 4 மணியளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான சங்ககிரி அருகே மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள்.
தொடர்ந்து சேலம் வரும் அவர் அடுத்த மாதம் 17ம் தேதி பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டு திடலுக்கு செல்கிறார். அங்கு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநாட்டு வழிகாட்டு குழுவினருடன் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இரவில் சேலத்திற்கு வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.
18ம் தேதி காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
தொடர்ந்து அன்று பிற்பகல் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். நாமக்கல்லில் மாலை 4 மணியளவில் நடைபெறும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu